அறிவியல் உலகின் புரட்சியாளர் டார்வின்!

காமிராவும், பைனாகுலரும் எடுத்துக்கொண்டு பறவைகள் பார்க்கிறேன் என்று பக்கத்தில் இருக்கும் குட்டைக்குக் கிளம்பும் என்னைப் போன்றவர்களையே, தேவையில்லாம ஊர் சுத்துறான் பாரு என்று வினோதமாகப் பார்ப்பவர்கள் இன்று இருக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள், 200 ஆண்டுகளுக்கு முன்பு கப்பலில் உலகம் முழுதும் சுற்றி உயிரினங்களை காணப் போகிறேன் என்று கிளம்பிய டார்வினை இந்த உலகம் எப்படிப் பார்த்திருக்கும்?

ஆனால் அந்தப் பயணத்தின் முடிவில் டார்வின் கண்டுபிடித்த அறிவியல் கோட்பாடு, மனித அறிவியல் சமூக தளத்தில் ஒரு புரட்சியையே உண்டாக்கியது என்று சொல்லலாம்! On the Origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favoured Races in the Struggle for Life என்ற அவரது நூல், எளிமையான ஒரு செல் உயிருக்கும் மனிதனுக்குமான தொடர்பை அறுதியிட்டுச் சொன்னது.

பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு என்பது ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் எளிமையான அமைப்புகளில் இருந்து சிக்கலான நுட்பமான அமைப்புகள் கால மாற்றத்தில் மாறி வந்தது என்று கொள்ளலாம். அடிப்படையில் எளிமையாகத் தோன்றும் இந்தக் கோட்பாடு ஆழமான வாசிப்புக்கு உரியது.

ஆங்கில பரிணாம உயிரியலாளரும், எழுத்தாளருமான டாகின்ஸ் சொல்கிறார்: கலிலியோ பூமி பிரபஞ்சத்தின் நடுவில் இல்லை என்று நிறுவினார்; அது போல, கடவுளின் படைப்பின் உச்சம் என்றும், பூமியில் கடவுளின் சாயல் கொண்ட உயிர் என்று இத்தனை நாளாக நம்பி வந்த மனித இனத்தின் கண்ணை திறந்து அவர்களின் 20 மில்லியன் உயிரின- உறவினர்களைக் காட்டியவர் டார்வின்! உயிர் என்னும் பெரும் மரத்தின் விரியும் பல கிளைகளில் ஒரு கிளைதான் மனிதன் என்று உரைத்தார். பகுத்தறியும் ஆற்றல், மொழி, தகவல் தொடர்பு என்று எத்தனை சிறப்பம்சங்கள் மனிதன் தனது என்று கொண்டாலும், அவனும்/அவளும் கூட இந்தப் பல்லுயிர் சங்கிலியில் ஒரு கண்ணியே!

இன்று டார்வினின் பிறந்தநாள்!

Leave a comment