ஒரு சிறு இசை – வண்ணதாசன்


சப்டைட்டில் உடன் உலகத்தர பிரெஞ்சு படங்கள் பார்த்தது போல இருந்தது “ஒரு சிறு இசையின்” கதைகள். தமிழ் தான் என்றாலும், இக்கதைகளில் உள்ள கவிதைத் தன்மையும், பாத்திரங்களின் அகமொழியும் பழக 3 கதைகள் பிடித்தன. ஒவ்வொரு கதையும் ஏற்படுத்திய தாக்கத்தை கடந்து அடுத்தது வாசிக்கவும் நாட்கள் ஆகின. ஆனால் அதையெல்லாம் தாண்டி, பொதுவாக ஒரு சிறுகதை தொகுப்பில் 40 சதம் கதைகள்  பிடித்திருக்கும் எனக்கு, இத்தொகுப்பில் இரண்டு கதைகள் தவிர மற்ற அனைத்துமே பிடித்துப்போனது!

‘ஒரு தாமரைப் பூ, ஒரு குளம்’ என்ற சிறுகதையில், மையப் பாத்திரத்தின் ஒரே செயல் சாயங்காலம் நடை செல்வது தான். ஆனால் கதை அந்த வினையைத் தொடாமல், பாத்திரத்தின் நினைவைத் தொடரும்போது, அது நம்மை வேறொரு தளத்துக்கு இட்டுச்செல்கிறது!

நம்மையே அறியாமல் நாம் கடந்து போகும் சிறு உணர்வுகள் தான் இத்தொகுப்பின் பல கதைகளில் முக்கியப் பங்கு கொள்கிறது. ஒருவர் இறந்தபின் அவரது செல்பேசி எண்ணை நாம் அழிப்போமா, நினைவுக்காக வைத்திருப்போமா? ஜான்சி சோமு இறந்தபின் தான் அவரது எண்ணை செல்பேசியில் ஏற்ற வேண்டும் என்று நினைக்கிறாள்! மேலும் சில தோன்றல்களின் உவமைகளாக வண்ணதாசன் எழுதும் காட்சிகள், கவித்துமாக நம்முன் விரிகின்றன:

பேபி வந்திருக்கிறாள் என்று தெரியும்போது ராசாமணியின் உணர்வை இப்படி வெளிப்படுத்துகிறார்:

“மலையில் இருந்து இறங்கி, முதுகில் கருப்புமண்ணும் தழையும் கிடக்க, தும்பிக்கை வீசியபடி வயலில் நிற்கும் யானை ஒன்று தூரத்தில் நிற்பது போல இருந்தது”

கஸ்தூரி அக்காவின் சிரிப்பு அடுக்களையில் இருந்து இப்படிக் கேட்டதாம்:

“ஒரு சோப்புக் கொப்புளம் பெட்ரோல் நீலமும் வாடாமல்லிச் சிவப்பும் படித்துறையில் உரசின மஞ்சளுமாகத் திரண்டு பெரியதாகி, எல்லாப் பக்கங்களிலும் வர்ணங்களைச் சிதறி வெடிக்கிறது போல அது.”

நமக்கு நாமே போட்டுக் கொண்டிருக்கும் யதார்த்த வேலிகளைத் தாண்டி அவரவர் கனவுகளும் நினைவுகளும் குழம்பி நிற்கும் விசித்திர உலகுக்கு பயணம் கொள்கிறது கதைகள்! இதற்குத் தேவையான காட்சியமைப்புகளும் பாத்திரங்களின் ஊடே அமையப் பெறுவது அழகு. ஜானகி அந்தக் கடிதத்தை நீலாவுக்கு எழுதி இருக்கலாம்தான். ஆனால் அவள் சுந்தரத்துக்குத் தானே எழுதினாள். அதற்கு அவள் சொல்லும் காரணமே ஒரு காட்சியாய் விரிந்து வியக்க வைக்கிறது:

“வெயிலில் உலர்த்துவது என்றாகிவிட்டது. எல்லா இடத்திலும் தானே வெயில் விழும். ஆனால் இங்கே மட்டும்தான் விழும் என்பது போல ஒவ்வொருத்தரும் கொடியில் ஒரு இடத்தில் தொங்கப் போடுவது நமக்குப் பிடித்திருக்கிறது. இல்லையா?”

சில இடங்களில் இதே surreal கதையாடல் தான் தொய்வையும் தருகிறது. வாசித்த பத்தியையே மீண்டும் வாசித்துத் திரும்புவது போல; கடந்து போன படக்காட்சியை மீண்டும் ஓட்டி முதலில் இருந்து காண்பது போல.

மூக்கம்மா ஆச்சி சொல்வது போலத் தான் சொல்லத் தோன்றுகிறது:

“எல்லாக் கதையும் ஒரே கதை தான். ஆதியிலே இருந்து ஒரு கதையைத் தான் ஓம்பது கதையா சொல்லிக்கிட்டு இருக்கோம் திலுப்பித் திலுப்பி”

ஆனால் ஒரே கதை வெவ்வேறு கலைஞர்களிடம் இருந்து புறப்படும்போது அது தரும் அனுபவம் வெவ்வேறாகிறது இல்லையா! “ஒரு சிறு இசையை” பொறுத்தவரை, அது நமக்குள் கடத்தும் உணர்வும், தரும் நினைவுகளும் புதுமையானவை. அன்பும், மன்னிப்பும், பரிவையும் கொண்ட இக்கதைகள் முடிந்துவிடக் கூடாது என்று எண்ணவைப்பவை!

Leave a comment