வாசிப்பு 1: எண்பதுகளின் தமிழ் சினிமா

‘திரைப்படங்களின் ஊடாகத் தமிழ்ச் சமூக வரலாறு’ என்ற துணை தலைப்போடு வருகிறது ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் ‘எண்பதுகளின் தமிழ் சினிமா’. வெறும் வரலாறாக இல்லாமல், அக்காலகட்டத்தின் தமிழ் சமூகமும், சினிமாவும் ஊடாடுகிற இடங்களை கோடிட்டுக் காட்டும் கட்டுரைகளைத் தாங்கியிருக்கிறது.

சரியாக 1980இல் இருந்து 1989 வரையிலான படங்களாக இல்லாது, 80களின் குறிப்பிட்ட ஒரு போக்கை தாங்கி வந்திருக்கிற, 80களுக்கு முன்னும் பின்னும் வந்திருக்கும் படங்களையும் இவரது கட்டுரைகள் பேசுகின்றன. வழக்காறுகள், தெய்வ நம்பிக்கை, சாதியக் கட்டுமானம் என்று பல கோணங்களில் திரைப்படங்களை அணுகுகிறார் ஆசிரியர். ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளூர் தெய்வங்களின் கதைகளே திரைப்பிரதியாக மாறியதை முதல் கட்டுரை பேசுகிறது. அடுத்தடுத்து நீலாம்பரி என்னும் நீலியையும், பாட்ஷா என்னும் கண்ணகியையும் (மிகவும் சுவாரஸ்யமான கண்ணோட்டம்!!), பொதுமகள் x குலமகள் குறித்த சினிமா பார்வை ஆகியவற்றை நாம் பார்க்கிறோம்!

ஆங்கிலத்தை தப்பும் தவறுமாக பேசுவதை பட்லர் இங்கிலீஷ் என்று கூறுவோம் இல்லையா, அதிலுள்ள ‘பட்லர்’ என்னும் ஒடுக்கப்பட்ட மக்களின் சித்தரிப்பு சினிமாவில் எப்படி இருந்தது என்பது பற்றியது ஒரு கட்டுரை. நம் சினிமாக்களில் வெறும்
நகைச்சுவை பாத்திரங்களாக, ஒன்றும் அறியாத வெகுளிகளாகவே சித்தரிக்கப்பட்ட சமூகம் அது!

கடைசி மூன்று கட்டுரைகளை, மற்றவைகளை விடவும் மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன்:

  • எண்பதுகளில் இடதுசாரி சிந்தனைகள் தாங்கிய படங்கள் வந்தாலும், பாரதிராஜாவின் தாக்கத்தால் கிராமியப் படங்களும் நிறையவே வந்தன; அவை தமிழ் பாரம்பரியம் அல்லது பண்பாடு என்று, குறிப்பிட்ட ஒரு சாதியின் பெருமையையும் கூடவே கூட்டி வந்தது. இது 90களில் சாதிப் பெயர் கொண்ட படங்கள் வரும்போக்கை துவக்கி வைத்தது என்றும் சொல்லலாம்.
  • பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ பற்றிய கட்டுரை வாசிக்கும்போது, இப்போது toxic என்று சொல்கிறோமே, அதன் மொத்த உருவாக எவ்வாறு அந்தப் படம் இருந்தது என்று பார்க்கிறோம். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதை வகைமாதிரியாகக் கொண்ட படங்கள் தான் கிராமிய மணம் என்ற பேரில், தென் மாவட்டங்களின் தேவர் சாதிப் பெருமையும், மேற்கு மாவட்டங்களில் கவுண்டர் சாதிப் பெருமையும் 90களின் இறுதி வரைப் பேசியவை.
  • இப்படங்களில் உள்ள பிரச்சினை சமூகத்தின் சாதி அடக்குமுறைகளை கேள்விக்கு உட்படுத்தாமல் நழுவியது தான். ஒரு சாதிக்குள் இருக்கும் வர்க்க முரண்கள் பற்றி மட்டுமே பேசுவது, சாதி கடந்த காதலில் நாயகன் அல்லது நாயகியை அனாதை என்று காட்டி சாதியை மறைத்து தப்பிப்பது என்று நிகழை விட்டு விலகி நின்ற பிரதிகளைத் தான் அங்கு நாம் பார்க்கிறோம்.
  • தமிழ் சினிமாவின் முன்னோடி நடிகரான சிவாஜி கணேசனே, 74இல் இருந்து 95இல் பசும்பொன் வரை தேவர் சமூகப் பாத்திரங்களில், அச்சமூகப் பெருமை பொங்க நடித்தார் என்பது அவர் மீது எனக்கிருந்த பிம்பத்தை சுக்குநூறாக்கியது!!
  • நவீனத்தையும் பண்பாட்டையும் எதிரெதிர் நிறுத்தி, சாதி மீறல் குரல்களை பண்பாட்டின் மீதான நவீனத்தின் தாக்குதலாக மாற்றியது பாரதிராஜாவின் படங்கள். மேலும் ‘அவரது படங்களில் நிகழும் சாதிய உடைவு என்பது மேலே இருந்து மனம் நெகிழ்ந்து தரப்படும் சலுகை மட்டுமே; அது கீழே இருந்து எழும் உரிமைக்குரல் அல்ல’ என்று முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே, வேதம் புதிது போன்ற அவரது படங்களைக் கொண்டு நிறுவுகிறார் ஆசிரியர்.
  • இறுதியாக நவீனம், பாரம்பரியத்திடம் பணிந்து போகும் பிரதியாக தேவர்மகனைக் காட்டுகிறார்.

சன் டிவியிலும், கே டிவியிலும் மதியம் வரும்/வந்த திரைப்படங்கள் தான் இவை என்பதால் வாசிப்பு பல இடங்களில் நாஸ்டிலஜிக்காக மாறுகிறது. நாம் ரசித்த சில படங்களை வேறு கோணத்தில் காணும் சாத்தியத்தை இந்நூல் நமக்கு வழங்குகிறது. ‘1980களின் தமிழ் சினிமா: கிராமம் என்கிற களம்’ என்ற கட்டுரை கிராமத்தை புனித பிம்பமாக நினைக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்றாக நான் பார்க்கிறேன்.

நூல்: எண்பதுகளின் தமிழ் சினிமா
ஆசிரியர்: Stalin Rajangam
பக்கம்: 154
பதிப்பு: நீலம் பதிப்பகம் 💙

Leave a comment