Memoirs: ஓவியம்

எனக்கு நெருக்கமான மக்களுக்கு மட்டுமே நான் வரைவது எப்படி இருக்கும் என்று தெரிய வாய்ப்புண்டு. அவர்களுக்கே தெரியாத ஒன்று, சிறு வயதில் ஓவியத்துக்கு நான் வாங்கிய பரிசு. ரெண்டாம் கிளாசில், பள்ளிகளுக்கு இடையேயான போட்டி ஒன்றில் மூன்றாம் பரிசு வாங்கினேன்; என் நினைவில் நான் வாங்கிய முதல் சான்றிதழ் அதுதான். அல்பேனியா நாட்டில் பிறக்காததற்கு சந்தோசப்பட்ட தருணமும் அதுதான். அப்படி என்ன வரைந்தேன் தெரியுமா? நம் தேசியக் கொடி!

மூன்றே வண்ணம், நடுவில் ஒரு சக்கரம்; அதைத் தாங்கும் நெட்டுக் கம்பம் ஒன்று. என் ஓவியத்தில் காற்று வீசவில்லை என்பதால் விறைப்பாக நின்று பட்டொளி வீசியது மூவர்ணக் கொடி. அல்பேனிய நாட்டு சிறார்கள், எங்ஙனம் அந்த இருதலை கழுகை வரைவார்களோ?

என் ஓவியம் அல்ல. அது எங்கே போனதோ தெரியவில்லை!!

வினாத்தாள் கேன்வாஸ்

எனக்குள் கொஞ்ச நஞ்சம் இருந்த ஓவியச் சுடர், அணையாமல் இருந்திருக்கக் காரணம் தேர்வு நாட்கள். அரையாண்டு, காலாண்டுத் தேர்வுகளில் இரண்டரை மணிநேரத்துக்கு எழுதப் பொதுவாக சரக்கு இருப்பதில்லை. வினாத்தாளின் கடைசி பக்கத்தில் இருக்கும் வெற்றிடமே என் கேன்வாஸ். போகீமான்களும், பென் 10இல் வரும் சிறு ஏலியன்களும், என்னால் வரைய முடிந்த சில caricature களும் தான் என் சப்ஜெக்ட்ஸ். இவைதவிர வரலாற்றுப் புத்தகத்தில் இருக்கும் ஹிட்லரும், திப்புசுல்தானும், ராஜா ராம் மோகன் ராயும் என்னிடம் makeover க்காக வருவர். அவர்களுக்கு கேசம், மீசை, மருவு இவையெல்லாம் வைத்து ஆள்மாறாட்டம் ரேஞ்சுக்கு மாற்றுவதும் ஒரு பொழுதுபோக்காக இருந்தது. தவிர இதுவும் ஓவியம் தானே?

எழுத்தென்னும் ஓவியம்

ஓவியத்துக்கு என்று தனியாக ஒரு கிளாஸ் இருந்ததும் நினைவுக்கு வருகிறது. ஓவியம் தவிர ஐஸ் குச்சி வைத்து ஒரு சுவரில் தொங்கும் frame ஒன்றும், கூடை பின்னும் வயர்கள் கொண்டு ஏதோ செய்ததும் கூட நினைவுக்கு மெல்ல வருகிறது. இதற்கானப் பொருள்களை வாங்க அம்மா தன் வண்டியில் வைத்து என்னைக் கூட்டிச் செல்வார். அப்பா இதிலெல்லாம் நாட்டம் காட்டியதில்லை.

ஓவியம் என்றால் என்ன என்று சொல்லச் சொன்னால் எனக்கு விளக்கத் தெரியாது என்றே நினைக்கிறேன். மை தொட்டு கோடுகள் இட்டு காணும் ஒன்றை, நினைவில் எப்போதோ கண்டதை, கற்பனையைத் தீட்டுதல். நான் வரையும் ஒன்று எனக்கு ஒன்றாயும், பார்க்கும் வேறொருவருக்கு ஒன்றாயும் தோன்றலாம்; அவரவரின் காட்சியே ஓவியம். அப்படிப் பார்த்தால், தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே என் கையெழுத்து கண்ராவியாக இருக்கும் என்பது என் ஆசிரியர்/பெற்றோர்களின் அபிப்பிராயம். அதனால் இருக்கும் பாடங்களுக்கு மேல் கையெழுத்து பயிற்சி என்று அதற்கெனத் தனியாக பிரத்யேகக் கோடுகள் கொண்ட ஒரு நோட்டு! கோடுகளுக்கு இடையே எழுத்துக்கள் உக்கார வேண்டுமாம். மனிதர்களுக்கு நேர்த்தியைக் குறித்தான ஆசையும், ஆவலுமே இப்படி எழுத்துக்களை கோடுகளுக்கு இடையில் அடைக்க சொல்கிறது என்று நினைக்கிறேன்.

அங்ஙனம் ஒரு அசந்தர்ப்பமான கையெழுத்து பயிற்சி ஒன்றில் சட்டென ஒரு பொறி தட்டுகிறது. எழுத்துக்களே ஓவியம் தானே, இதோ புலியின் இகார நெளிவு, அதன் வளைந்த வால்; நண்டின் ‘ந’ வும் ‘டி’ யும் நண்டின் பக்கவாட்டில் நகரும் கால்கள்; கோபம், மகிழ்ச்சி, சோகம் போன்ற சொற்கள் அதன் ஒலியைத் தாண்டி, தோற்றத்திலும் அதே உணர்ச்சியைக் கொண்டு வருவதைக் காண்கிறேன்!

“வளர்ந்த பின் கொஞ்சம் தயக்கம் வந்து விடுகிறது”

ஓவியக்காரனின் மரணம்

வளர்ந்த பின் கொஞ்சம் தயக்கம் வந்து விடுகிறது. சின்னதில் இருந்தது போல லஜ்ஜையின்றி சிலவற்றை செய்ய முடியவில்லை. அழகாய் வரையும் என் வகுப்பு பெண்கள் போல், நான் வரைந்த அமீபாக்களும் என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கின; கூடவே மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும். விலங்கியல், தாவரவியலில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம் ஓவியம். குறுக்குவெட்டுத் தோற்றங்களாய் பல்வேறு உயிர்களின் உள்ளுறுப்புகளை வரைய வேண்டியதாக இருக்கும். மற்றவர் நூலில் உள்ள படத்தை பிரதியெடுக்க, நானோ என் மன பிரபஞ்சத்தின் உயிர்களைக் கற்பனையால் வரைந்திருப்பேன்!

கடைசியாக வரைந்தது எப்போது என்று நினைவு இருக்கிறது. மண்டை காய்ந்த பிற்பகல் ஒன்றில், அலுவலக மேஜையில் பச்சை மார்க்கர் கொண்டு பறவைகளை வரைந்து கொண்டிருந்தேன். எளிதாக வரைவது எப்படி என்று டுடோரியல் ஒன்றும் கைபேசியில் ஓடிக்கொண்டிருந்தது. பிட்டாவும், ராபினும், பூநாரையும், ஆந்தைக் கண்ணனும் என் தூரிகையில் உயிர் பெற்று வந்தனர். ஹெட்போன் ஒலி தாண்டி பின்னாலிருக்கும் என் சகாக்களின் காலாய்ப்பும் கேட்டது. கண்ணீர், கவலை ஏதுமின்றி ஒரு ஓவியக்காரன் மரணித்து இருந்தான்.

பி.கு: நானொன்றும் அவ்வளவு அழகாக வரைபவன் அல்ல.

Memoirs என்னும் இந்த சீரிஸ் அகால மரணத்துக்கு பின்னால், என்னைக் குறித்தான சில நினைவுகளை இன்னும் மேலும் சில நாட்களுக்கு கடத்த எழுதுவது. எனக்கு நினைவுதப்பிப் போனால், கொஞ்சம் என்னைப்பற்றி எனக்கே சொல்வதற்கும் கூடத்தான் இது. நேர்த்தியற்ற நினைவு அலைகளின் குறுக்கு வெட்டு தோற்றம்!

Leave a comment