புத்தம் சரணம்

16.04.2020

நூல்: புத்தம் சரணம்
ஆசிரியர்: அ.மார்க்ஸ்

புத்தத்தைக் குறித்த சுருக்கமான கட்டுரைகள் அடங்கிய நூல் இது. பவுத்தம் என்னும் மாற்று கருத்தாக்கம் உருவாகி வளர்வதற்கான காரணம் இந்நூலில் தெளிவாகிறது. ஆரியக் குழுக்கள், தாம் கொணர்ந்த வேள்வி, சாதிமுறை ஆகியவற்றின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கங்கை சமவெளியில் இருக்கிற பழங்குடி மக்கள், சிற்றரசுகளைக் கைப்பற்றுகின்றனர். ஆரிய பார்ப்பனீய வழி வந்த சாதிய அடக்குமுறை, சிரமணர்கள் என்று பலரை ஆசீவகம், சமணம், என மாற்று தெய்வ கருத்தாக்கம் நோக்கி எப்படி துரத்திற்று என்றும், அந்தக் காலவெளியில் வந்த கோதமர் புத்தனானது என பயணிக்கிறது இந்நூல்.

பவுத்தக் கருத்தானது, எப்படி சமயம் என்னும் தளத்தில் நில்லாது வாழும்முறை ஒன்றாகப் பரிமாணம் கொள்கிறது என்பதையும் அறிகிறோம். குருகுலத்துக்கு மாற்றாக யாருமே கேள்வி கேட்கலாம் என்கிற சங்கம் முறை, பிறப்பின் அடிப்படையில் தீண்டாமை பாராட்டாத சமத்துவம் வாய்ந்த மாற்றாகவும் அமைகிறது. அனாத்ம வாதம்- பார்ப்பனீயம் இறைமயப்படுத்தியத்தை அறமயப்படுத்திய பவுத்தம் என்ற கட்டுரை, ஆன்மா, ஜென்மங்கள், கர்மா என்று கம்பு சுற்றி வயிறு வளர்க்கும் பார்ப்பனீயம் மற்றும் அதற்கு மாற்றாக உதித்த, அற விழுமியங்கள் சார்ந்து மட்டுமே இயங்குகின்றது பவுத்தம் என்று எடுத்துக்காட்டும் சிறந்தவொரு பாகம்!

புத்தர் என்னும் தனி மனிதனைக் குறித்த மதிப்பு மேலும் கூடும் பல இடங்களை இந்நூலில் கடந்து வந்தேன்! சென்ற இடங்களில் எல்லாம் புத்தர் சந்தித்த உரையாடல்களே, தத்துவ விசாரங்களே அவ்வளவு அன்பும், கனிவும் நிறைந்தவையாக இருக்கின்றன; Practical ஆன ஆளா இந்திருக்கிறாரே என்று எண்ணி வியக்கத் தோன்றும் மனிதர்! யார் சொன்னாலும், சொன்னது தானாகவே இருந்தாலும் ஐயம் கொள்; அறிவு கொண்டு தெளிவு பெறு என்ற ஐயுறுதலின் முக்கியத்தை தன் இறுதி மூச்சு வரை வலியுறுத்தத் தவறியதே இல்லை! முன்னர் தன் சாக்கிய சங்கத்தில் போரைத் தவிர்க்க எடுத்த நிலையாகட்டும், பின்னர் தான் உருவாக்கிய புத்த சங்கத்தின் அடுத்த தலைமையும் சனநாயக முறையிலே பிக்குகளின் முடிவில் அமையவேண்டும் என்று சொல்வதாகட்டும், புத்தர் இன்றைக்கும் தேவைப்படுகிற தலைவராக உயர்கிறார்!

இவ்வளவு உயர்ந்த புத்தம், தற்காலத்தில் இலங்கையில், பர்மாவில் மக்கள் விரோத ஆட்சிகளின் பின்னூக்கியாக இருப்பதையும் ஆசிரியர் முடிவில் குறிப்பிடத் தவறவில்லை!

புத்தர் மற்றும் பவுத்தம் குறித்த சிறப்பான அறிமுக நூல் இது. பவுத்தம் என்னும் கடலின் கரை; இன்னும் பயணிக்க இதில் ஏராளம் தூரம் உண்டு.

புத்தம் சரணம் கச்சாமி!

இந்நூலை எனக்கு அறிமுகம் செய்த மேகாவுக்கு அன்பு❤️!

One thought on “புத்தம் சரணம்

  1. Pingback: Where Periyar meets Buddha – Peregrinations

Leave a comment