இளைஞர்களுக்கான புத்தர்!

அண்மையில் குலுக்கை youtube சேனலில் பேராசிரியர் கருணானந்தன் அவர்களது, பௌத்தம் மற்றும் சமணம் குறித்த உரையைக் காண நேர்ந்தது.  அவர் அதில் பௌத்தத்தின் முக்கியக் கூறுகளாக குறிப்பிட்டுக் கூறிய அனாத்ம வாதமும், அநித்ய வாதமும் என் கவனத்தைத் தூண்டின.

அனாத்ம வாதம் என்பது ஆத்மா என்னும் ஒன்றே இல்லை என்ற புத்தரின் வாதம். அநித்ய வாதம் என்பது மாறிக்கொண்டே இருக்கும் உலகின் நிலை இல்லாத தன்மையை குறிக்கும். ஆத்மா என்பது மனிதரின் கற்பனை; ஆத்மா இருப்பது கொண்டு தான், பூர்வ ஜன்மம், மறு ஜன்மம் போன்ற வாதங்களை வைதீக மதமான இந்து மதம் முன் வைக்கிறது. அது எங்ஙனம் ஒரு ஒடுக்குமுறைக்கான கருவியாயிற்று என்பதையும் தெளிவாக விளக்குகிறார் பேராசிரியர் அவர்கள்.

இதைத் தொடர்ந்து, என் வீட்டில் இருந்த நேஷனல் புக் ட்ரஸ்டின் “இளைஞர்களுக்கான புத்தர்” என்னும் நூலைப் படித்தேன். முன்னமே படித்த நூலென்றாலும், இப்போது படித்தபோது சில விஷயங்களை நுட்பமாக உணர முடிந்தது. 40 பக்கங்களே கொண்ட இந்நூல் புத்தருக்கான ஒரு அறிமுகம் தரக்கூடிய நூல்; 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட புத்தரின் வாழ்க்கை இந்நாளில் உள்ள சமூகத்துக்கும், இளைஞர்களுக்கும் எப்படிப் பொருந்துகிறது என்று விளக்குகிறது. சித்தார்த்தன் என்னும் மனிதன், கேள்விகளால் உந்தப்பட்டு, விழிப்புற்று, அன்றைய சமூகத்தின் இழிவுகளை எதிர்க்க வந்த புரட்சியாளனாகத் தான் புத்தரை நான் பார்க்கிறேன்!

அரண்மனை விட்டேகிய சித்தார்த்தன் கண்ட சோகக் காட்சிகள், மனைவி மக்கள் விட்டுப் பிரிந்தமை, தேவ பாஷையாக இருந்த சமஸ்கிருதம் அல்லாது மக்கள் அன்று பேசிய பாலி மொழியில் பிரசங்கங்கள் நிகழ்த்தியது போன்ற யாவரும் அறிந்த சம்பவங்கள் தவிர்த்து, பரவலாக அறியாத சிலவற்றை இங்கு எழுதுகிறேன்.

1. சித்தார்த்தன் என்னும் புத்தன், சுத்தோதனருக்கு உயர்குடியில் பிறந்தவர் என்பதே நம்மிடையே நிலவும் கதை. ஆனால் “என் சாக்கிய தந்தை நிலத்தில் உழுதுக்கொண்டிருக்கும் போது, நான் குளிர்ச்சியான ஜம்பு மர நிழலில் அமர்நது பார்த்துக்கொண்டிருந்தேன்”, என்று துறவியான புத்தர் நினைவு கூறுகிறார். (மஜிமா நிக்காய). புத்தர், ஒரு சாதாரண விவசாயி மகனாக இருக்கலாம் அல்லது ஒரு செல்வாக்கான படைவீரராக இருக்கலாம் என்பதே மேற்கண்ட புத்தரின் கூற்றில் உள்ள உண்மை. உயர்குடியில் பிறந்த ஒருவராகவும், விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று புத்தர் என்று இந்து மதமானது செய்யும் பரப்புரையில் இருந்து இது வெளியே நிற்கிறது!  பாரதத்தின் கர்ணன் முதற்கொண்டு, நம் மதுரை வீரன் வரை, கீழ் குலத்தில் பிறந்திருந்தாலும், அவர்களையும் மேல் குலத்தில் வைத்து நம்மவர் என்று கதை கட்டும் பார்ப்பனீயத்துக்கு எதிராக அமைகிறது இது.

2. தன் மனையை விட்டு துறவுபூண்டு காட்டுக்குச் செல்லும் புத்தர், அங்கே மனித அவலத்தைப் போக்கும் நெறிமுறைகளைத் தேடிப் பல்வேறு சாதுக்களை, ஞானிகளை நாடினார். பின்னர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த கடுந்தவ முறையை பின்பற்றலாம் என்று வெறும் அவரை, கீரை, பட்டாணி போன்றவற்றின் சாற்றினை மட்டும் விழுங்கி, தியானத்தில் ஈடுபடலானார்.  “சிதிலமான வீடுகளின் மூங்கில் தப்பைகளைப் போல் என் விலா எலும்புகள் தொங்கின. ஆழமான கிணற்றில் தண்ணீர் ஜொலிப்பது போல் குழி விழுந்த என் கண்களில் ஒளி மின்னிற்று”, என்று தன் சீடர்களான சரிபுட்டாவிடம் சொல்வதாக ஆரிய பரிவேசனா என்னும் நூல் தெரிவிக்கிறது. மனத்தைக் கட்டுப்படுத்த கடினமான இந்த வாழ்வால் இயலாது; சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும், என்று மீண்டும் சத்தான ஆகாரம் எடுத்துக்கொண்டு உடல் பலத்தைத் திரும்பப் பெற்ற புத்தர், தியான வாழ்வை மீண்டும் தொடர்ந்தார். கடுந்தவதாலும், தன்னை வருத்திக் கொள்வதாலுமே இறைவனை, ஞானத்தை எட்ட முடியுமென்ற வாதத்தை இவ்வாறு முறியடிக்கிறார் புத்தர். இன்றும் பல்வேறு மதங்களில், உடல் வருத்திச் செய்கிற நோன்புகளும், வேண்டுதல்களும் உண்டு; காட்டாக,  அலகு குத்தல், இஸ்லாமியர்கள் முஹர்ரம் பண்டிகையில் கத்தியால் காயப்படுத்திக் கொள்ளுதல். உடல் வலு, பசி இல்லாத நிலை, இவைகளே கவலை ஏதும் இல்லாது ஞானமார்க்கம் நோக்கி தியானிக்க சரியான பாதை என்று நடைமுறைக்குரிய பயிற்சியைப் பரிந்துரைக்கிறார்; ஆகச்சிறந்த pragmatist!

உண்ணாது மெலிந்த புத்தர்


3.பிற்காலத்தில் பரவி, சிறந்து விளங்கிய இலங்கை பௌத்தமாக இருக்கட்டும், திபெத்திய பௌத்தமாக இருக்கட்டும், அவை புத்தரின் ஞான வழியில் அவருக்கு ஏற்பட்ட தடங்கல்களை, மாறன் (வைதீக புராணங்களில் உள்ள மன்மதனுக்கு நிகர்) மற்றும் அவனது மகள்கள்  புத்தரின் தியானத்துக்கு இடையூறு செய்வதாகக் கதைகள் கூறும். அவை யாவும், காட்டில் தனிமையில் வாழ்ந்ததால் உண்டான பயங்கர நினைவுகளே என்று தன் சீடர்களான சரிபுட்டாவிடம், இவ்வாறு கூறுகிறார் புத்தர்: “நான் வனத்தில் மிகவும் பயந்திருந்தேன். ஏதேனும் மானாகவோ, மயிலாகவோ இருக்கலாம்; என்னருகே சருகுகள் ஊடே காற்று சலசலத்துச் சென்றிருக்கலாம். ஆனால் இந்தச் சின்ன அசைவுகளுக்குக் கூட பயந்தேன். பின்னர் நான் ஏன் இப்படி பயப்படுகிறேன் என்று எண்ணிப் பார்த்தேன்! உடனே நிற்கவோ, படுக்கவோ செய்யாது மேலும் கீழுமாக நடந்து என் பயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்” என்கிறார். தனிமையில் காட்டில் யாருக்கானாலும் நிகழும் பயத்தை பூதங்களாக்கவில்லை அவர்! இருப்பதை இருப்பது போல் பதிவு செய்யும் புத்தரின் வாக்கியங்கள் மஜிமா நிக்காய நூலில் உள்ளது. இதுவே பின்னர் மாறன் என்னும் அரக்கன் ஆனதுதான் வேடிக்கை!

புத்தருக்கு மாறனுக்கும் நடக்கும் யுத்தம். மாறன் என்பது புத்தரின் மனத்தில் எழுந்த பயமே!

4. புத்தருக்கு இருந்த ஒரு ஐயத்தைக் குறித்து வினய பித்தகா, விளக்குகிறது. ஞானத்தை போதி மரத்தின் கீழ் உணர்ந்த சித்தார்த்தனே, பின்னர் “விழிப்புநிலை அடைந்த”, என்னும் பொருள்கொண்ட புத்தர் ஆகிறார். தான் அறிந்துணர்ந்த உண்மையை தன்னைப் போலவே மக்களும் உய்த்து உணர்வதே நன்று என்றும், பிறருக்கு உபதேசித்து அவர்களால் அந்த ஞானத்தை எட்ட முடியவில்லை என்றால்,” அத்தகைய அனுபவம் என்னை வருத்தும்”, என்றும் வருந்தும் புத்தர், பின்னர் மக்களின் மேல் கொண்ட அன்பால், ஐயத்தை வெல்கிறார். சங்கம் வளர்த்து தன் வழியை பரப்பத் தலைப்படுகிறார்!

5. புத்தரின் உபதேசங்கள், விவேகமும், யதார்த்த அணுகுமுறையும் கொண்டவை; உதாரணமாக, ” கண்களும், பார்ப்பவை யாவும், காதுகளும், கேட்பவை யாவும், மூக்கும், முகர்வன யாவும், நாக்கும், ருசிப்பவை யாவும், உடலும், தொடுவன யாவும், புத்தியும், எண்ணங்கள் யாவும் ஆன இவைதான் ‘எல்லாம்’. இதைத் தவிர எதையும் உய்த்து உணர முடியாது.” பொன்மயமான, முதுமையற்ற, அழிவற்ற, மீண்டும் பிறக்கும் சக்தியுள்ள உலகத்தைப் பற்றி கேட்டபோது, புத்தர், “இந்த உலகத்தைத் தவிர பொன்னுலகம் என்று ஒன்றுமே இல்லை”, என்று உறுதியாகக் கூறுகிறார். சம்யுத்தா நிக்காய என்னும் நூலில் கிடைக்கும் இந்தத் தகவலானது, பிற மதத்தவர், முக்கியமாக, அந்நாளைய இந்தியாவில் தழைத்தோங்கி இருந்த வைதீக மதம் கூறும் மோட்சம், மறுபிறவி ஆகியவற்றில் புத்தருக்கு நம்பிக்கை இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

உனக்கு நீயே ஒளியாய் இரு

முடிவாக புத்தர் தன் இறுதி நிமிடங்களில் தன் சீடரான ஆனந்தனுக்குக் கூறியதை சொல்லி நிறைவு செய்வது சிறந்தது. “எதிலும் எப்போதும் கவனமாய் இருங்கள்; நான் சொன்னேன் என்பதற்காகக் கூட அதை நம்பிவிடாதீர்கள். உங்கள் அறிவுக்கு ஏற்றவைகளையே நம்புங்கள்”, என்று “மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற வள்ளுவன் வாக்கையே கை கொள்கிறார்.

ஒளி உங்கள் உள்ளிருந்து சுடர் விடுமாறு வாழுங்கள்; இதைத் தவிர வேறு ஒளி கிடையாது

பேராசிரியர் திரு. கருணானந்தன் அவர்களது உரை காணொலி= https://youtu.be/jdzK_aTo3Tg

பௌத்தத்தின் திரிபித்தகா (Tripitakas) என்பது மூன்று கூடைகள் என்று பொருள் கொண்ட நூல்கள். அவை மூன்றும்- சட்ட பித்தகா, வினய பித்தகா, அபிதாம பித்தகா ஆகியன. அவற்றில் சட்ட பித்தகாவின் பிரிவுகளே மேற்கூறியவற்றில் உள்ள நிக்காய!

One thought on “இளைஞர்களுக்கான புத்தர்!

  1. Pingback: Where Periyar meets Buddha – Peregrinations

Leave a comment