பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன் – 1

இந்தப் பறவை நீருக்குள் கண்ணாமூச்சி ஆடும்; கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தாலும் ஓரிடத்தில் மறைந்து வேறொரு இடத்தில் மீண்டு வந்து ஜாலம் புரியும். புள்ளி மூக்கு வாத்தை ஒரு கணக்காக வைத்துக் கொண்டால், அதைவிட மிகச்சிறிய பறவை- முக்குளிப்பான் (Little Grebe).

முக்குளிப்பானின் அறிவியல் பெயர்- Tachybaptus ruficollis. பொதுவாக உயிரினத்துக்கு இடும் அறிவியல் பெயர்கள், அந்த இனத்தின் உடல் அடையாளம் அல்லது அதன் செயல்பாடுகளைக் குறித்த லத்தீன் காரணப் பெயர்களாக இருக்கும்.

அந்த வகையில் Tachybaptus என்னும் பேரினம் Tachy மற்றும் baptus ஆகிய சொற்களால் ஆனது; Tachy என்றால் லத்தீனில் வேகமாக என்று பொருள். பள்ளி அறிவியல் பாடத்தில் ஒரு வித இதய நோய்- Tachycardia என்று படித்திருப்போம். Tachycardia – வேகமாக துடிப்பதால் ஏற்படும் இதயக் கோளாறு. Baptus என்னும் சொல்லுக்கு ‘முங்கி எழுதல்’ என்று பொருள். கிருத்துவ நம்பிக்கையின் Baptism (ஞானஸ்நானம்) என்ற சொல் இதையொட்டி தோன்றியதே ஆகும்! இரண்டையும் சேர்த்து கவனித்தால் ‘வேகமாக முங்கி எழுகின்ற’ என்றாகிறது.

இனப்பெயரான Ruficollis என்பதை rufi + collis என்று பிரித்து rufous வண்ணமுள்ள கழுத்துப் பட்டை (collar) உடைய என்று பொருள் கொள்ளலாம். பறவைகள் பலவற்றில் rufous வண்ணம் என்று சொல்லப்படுவதைக் காணலாம். காட்டாக Rufous Treepie(வால்காக்கை), Rufous bellied eagle ஆகியவற்றைக் கூறலாம். Rufous என்பது சிவப்பு பழுப்பு கலந்த வண்ணம்.

ஆக முக்குளிப்பான், வேகமாய் மூழ்கி எழும் சிவப்பு பழுப்பு கழுத்தை உடைய பறவை என்பது இந்த லத்தீன் பெயர் மூலம் புலனாகிறது. முக்குளிப்பானுக்கு அதன் இணைசேரும் காலத்தில் நன்றாக இந்த வண்ணம் கழுத்தில் சேர்கிறது. மற்ற காலத்தில் வளர்ந்த பறவைகளுக்கும், இளம் பறவைகளுக்கும் சற்றே மந்தமான சாம்பல் நிறம் வாய்க்கிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் புற்களால் ஆன மேடை கட்டி அதில் முட்டை வைத்து மெல்ல அதன் மேலேறி அடைகாக்கும் முக்குளிப்பானைக் கண்டிருக்கிறேன். நீருக்கு வெளியே பார்த்தால் தான் தெரியும் அதன் கால்கள் உடலுக்கு மிகவும் பின்னால் அமைந்திருக்கிறது என்று!

அடைகாக்கும் முக்குளிப்பான்

எப்போதுமே அறிவியல் பெயர்கள் சரியானதாக இருக்கும் என்பது இல்லை. சில தவறான புரிதல்களால் அமைந்த பெயர்கள் அப்படியே நீடிப்பதும் உண்டு. அப்படி ஒரு பறவை பற்றி அடுத்த வாரம் அறிவோம்!

~மேலும் கற்போம்!

அடுத்த கட்டுரை:

பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன் 2

 

 

Leave a comment