பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன் 2

பாடல்கள் பல கொண்டிருக்கும்; மதியமோ வேனில் வெயிலோ அயர்ச்சி தாராது இதன் ராகத்துக்கு; கருப்பு வெள்ளையாய் வால் தூக்கி மர உச்சியில் இருந்து இசைத்து இணைக் கவரும்!

சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்ட அந்த தவறாக பெயர் சேர்ந்தப் பறவை தான் நான் மேலே விவரித்தது! குண்டுக்கரிச்சான் என்று அறியப்படும் Oriental Magpie Robin தான் அது! இதன் பெயர் குழப்பம் ஒரு சுவையான கதை தான்.

யால் (Dhyal) என்று அறியப்பட்ட இந்தப் பறவைக்கு அறிவியல் பெயரிட வந்த ஆங்கிலேய இயற்கையியலாளர் திரு.ஆல்பின், இதை dialbird என்று அந்த சொல்லின் சப்தம் மட்டுமே கொண்டு மொழிபெயர்த்து, சூரியக் கடிகாரமான sundial உடன் ஒப்பிட்டார். காரணம் தெரிந்துகொள்ளாமலேயே மற்றொரு பறவையியலாளர் திரு.ஜெர்டான், குண்டுக்கரிச்சானை sundial பறவை என்று விவரித்தார். இது தான் குழப்பம். சூரியக் கடிகாரம் தானே, எனவே சூரியனைக் குறிக்கும் solar என்னும் பொருள்பட saularis என்று இனப் பெயரும் சூட்டப்பட்டது. இது நடந்தது 18ஆம் நூற்றாண்டில்!

அடுத்த நூற்றாண்டில் கல்கத்தாவைச் சேர்ந்த மற்றொரு பறவை ஆர்வலர் பிலித், saularis என்ற இனப்பெயருக்குக் கொடுத்த விளக்கம் கொஞ்சம் பொருத்தமாய் இருந்தது என்றே கூறலாம். Saularis ஐ, சௌ + லாரி என்று பிரித்து, சௌ என்றால் வடமொழியில் 100 என்று பொருள், லாரி என்றால் பாடல். நூறு பாடல்கள் பாடவல்ல பறவை என்று பொருள் கொள்ளவேண்டும் என்று கூறி மேலும் இந்த இனப்பெயருக்கு வலுசேர்த்தார். பாடும் பறவை என்றாலும் 100 பாடல்கள் என்று கவித்துவமாக பெயர் வைக்கப்பட்டு, அறிவியல் பெயருக்கும் உருவ அமைப்பு/நடவடிக்கைக்குமே சம்பந்தம் இல்லாதப் பல உயிர்களில் இதுவும் ஒன்றானது!

கிட்டத்தட்ட தமிழகம் முழுதும் காணப்படும் குண்டுக்கரிச்சானின் அறிவியல் பெயர், Copsychus saularis. இதன் பேரினப் பெயரான Copsychus என்பது கிரேக்க மொழியில் இருந்து விரவி வந்தது. இதன் அர்த்தம் கருப்புப் பறவை என்பதாகும். இந்த பேரினத்தில் தான் பாடும் பறவைகளான சோலைப்பாடி (Shama), கருஞ்சிட்டு(Indian Robin) முதலியன அங்கம் வகிக்கிறது.

கூடுதல் தகவல்: தமிழகம் அறிந்த சூழலியலாளரான திரு.தியோடர் பாஸ்கரன் அவர்கள் இந்தப் பறவையை சுப்பிரமணிக்குருவி என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தின் தேசியப் பறவையான இது, அந்நாட்டின் ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ளது!

வங்கதேசத்தின் ரூபாய் நோட்டில்!

உருவ அமைப்பு, பறவையின் நடவடிக்கை என்று மட்டுமல்ல, அந்தப் பறவைப் பதிவுசெய்யப்பட்ட இடத்தின் பெயரும் அதன் அறிவியல் பெயராக வைப்பர். அப்படி நம் ஊர்களையும் அறிவியல் பெயரில் கொண்ட பறவைகளை அடுத்த வாரம் காண்போம்!

~மேலும் கற்போம்

3 thoughts on “பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன் 2

  1. சிறப்பு அமர்🌿 நிறைய புது தகவல்கள்; ஏன் வங்கதேசத்தின் காசோலையில் இவை இடம் பெற்றுள்ளன?
    *பிலித்* என்பது ஓர் ஆங்கில உயிரியல் ஆய்வாளர் பெயர் என்பது இக்கட்டுரை மூலம் அறிந்து கொண்ட இன்னொரு விடயம்🌿

    தொடர்ந்து எழுதவும் மேலும் அறிய. ஆவலாக உள்ளது🌿

    Liked by 2 people

  2. Pingback: பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன் – 1 – Peregrinations

Leave a comment