அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்|ஸ்டாலின் ராஜாங்கம்

அயோத்திதாசர் என்பவரை அவரது பிறந்தநாள் சமீபமாக பத்திரிகை கட்டுரைகளில் படித்தது தான் முதலில் அவர் குறித்து அறிந்தது. பின்னர் அம்பேத்கருக்கு முன்னமே பௌத்தம் தழுவிய தலித் செயல்பாட்டாளர் என்று அறிந்ததும் இவரைக் குறித்து மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது.

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்/சித்த மருத்துவர்/சாதி எதிர்ப்புப் போராளி அயோத்திதாசப் பண்டிதர். ஆங்கிலேயர் முதன்முதலில் மக்கள் கணக்கெடுப்பு தொடங்கிய 1881 ஆண்டிலேயே, தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட சாதியினரை இந்துக்களாக கருதாது, பூர்வத்தமிழர்/ஆதித்தமிழர் என்றே கருத வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர்; பௌத்தம் தமிழரின் பூர்வம், வைதீக இந்து மதம் பின்னர் வந்த திரிபு என தமிழ் ஏடுகள் பலவற்றை ஆய்ந்து, அவற்றைத் தன் தமிழன் பத்திரிக்கையில் நிறுவியவர். இவரது சிந்தனைகளின் மீது ஆய்வுவெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்!

நவீன கல்வி எனப்படும் ஐரோப்பிய வழிக் கல்வியின் துணை கொண்டே, மூடநம்பிக்கைகள், சாதி அடக்குமுறைகளை எதிர்ப்பதை நாம் கண்டிருப்போம். ஆனால் தான் வந்த மரபின்பால் நின்றே அதை எதிர்க்கலாம் என்று காட்டியவர் அயோத்திதாசர்!

இத்தொகுப்பில் மூன்று கட்டுரைகளை மிகவும் முக்கியமாக நான் பார்க்கிறேன். ஒன்று நவீன தமிழ் சமூகம் குறித்து காலடுவெல்லும் அயோத்திதாசரும் கொண்ட சிந்தனைகளின் குறிப்புகள். இவர் வாழ்ந்த காலம், அக்காலத்து போக்குகள் மற்றும் சிந்தனைகளின் ஊடே அவரது செயல்பாட்டை விவரிக்கும் கட்டுரை.

ரெண்டாவது சாதி பற்றிய உள்ளூர் புரிதல் என்ற கட்டுரை. சாதியின் தோற்றம், வளர்ச்சி குறித்த அயோத்திதாசரின் பார்வை இதில் வருகிறது. பௌத்தத்தை போலச் செய்து உருவான வைதீக – பிராமணிய சாதிகள் சமூகத்தில் நிலைகொண்டமை குறித்தும், அவற்றின் வளர்ச்சிப் படிநிலைகளை இவ்வாறு வைக்கிறார்:

  1. புனைதல் (சாதி என்னும் கற்பனையை)
  2. போலச் செய்தல்
    3.திரிபுப்படுத்துதல்
    4.திரும்பத் திரும்ப சொல்லுதல் அல்லது செய்தல்
  3. காலத்தால் பழமையாக்குதல்.

மூன்றாவதும் மிக முக்கியமானதுமான கட்டுரையில் அயோத்திதாசரின் தற்போதைய நிலை என்னவென்பதை சமீப காலத்திய அரசியலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. பெரியாரோடு இணைத்தே அடையாளம் காணப்படும் நாத்திகம், மரபை எதிர்நிலையில் இருந்தே பார்க்கும் ‘முற்போக்கு பார்வை’ என்னும் இன்றைய தளத்தில் இருந்து மரபின் துணைகொண்டு சாதிக் கட்டமைப்பை தகர்க்கப் பாடுபட்ட அயோத்திதாசரின் செயல்பாடுகள் விளக்கப்படுகிறது.

அயோத்திதாசரின் ஆகச்சிறந்த அம்சமாக நான் பார்ப்பது அவரது மொழி வல்லமை. ஏடுகளை படித்து அதன் உட்பொருளை அறிந்துகொண்டு பண்பாட்டு ரீதியாக சாதியின் மீது போர் தொடுக்கிறார். அதற்கு வலுசேர்க்கும் வகையிலே இந்நூலில் வரும் உதாரணங்கள், கார்த்திகை தீபம் என்பது பௌத்தத்தின் தாக்கம் கொண்ட கார்த்துல தீபம் என்பதையும், திருவண்ணாமலை என்பது அண்ணாந்து மலை என்பதையும் தமிழ் சொல்லாடல்கள், பண்பாடு, பழக்க வழக்கத்தின் துணை கொண்டே நிறுவுவது! எழுதப்பட்டிருப்பவையே உண்மைகள், அவையே தரவுகளாக ஏற்கும் தற்கால ஆய்வுச் சூழலில், இவரது பண்பாட்டு ரீதியான எதிர்ப்பு எங்ஙனம் பார்க்கப்படுகிறது என்றையும் இந்நூலில் அறியலாம்.

இதுவரை அயோத்திதாசர் சார்ந்து கவனம்பெறாத பல்வேறு தரவுகளை ஒன்றிணைத்து ஆராய்ந்து கட்டுரைகளாகத் தொகுத்த ஆசிரியர் Stalin Rajangam அவர்களுக்கு நன்றிகள்! மேலும் ஒரு சிறு யோசனை: அயோத்திதாசர் வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களை timeline போல் இணைத்து இருந்தால் இன்னும் உதவிகரமாக இருக்கும்!

அமரன்
20 June 2020

Leave a comment