அரசியல் சிந்தனையாளர் புத்தர்: ஒரு பார்வை

நூல் அறிமுகம்: “அரசியல் சிந்தனையாளர் புத்தர்”

புத்தர் காலத்து இந்து சமுதாயத்துக்கும், ஆதிக்கம் செலுத்திய பிராமணியத்துக்கும் சவாலாகத் தோன்றிய சிந்தனையாக பௌத்தத்தை ஆய்வு செய்யும் நூல் காஞ்சா அய்லய்யா எழுதி இருக்கும் “அரசியல் சிந்தனையாளர் புத்தர்”. நூல் நெடுக தத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம், நிர்வாகம், நீதிமுறை ஆகியவற்றில் புத்தர் கொண்டிருந்த நிலைப்பாடுகளை அவர் வாழ்ந்த காலத்தில் ஊடாக சென்று விரித்துரைக்கிறார் ஆசிரியர்!

2500 ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிய தரவுகள் எவ்வாறு இப்போதும் கிடைக்கிறது என்பது முக்கிய கேள்வியாகும். புத்தரது உரையாடல்களை அவரது சங்கத்தை சேர்ந்த பிக்குகள் தொகுத்து வைத்ததே திரிபிடகம் என்னும் நூல். தேரவாத பௌத்தத்தின் தத்துவ அடிப்படையாக இந்நூலைக் கூறலாம். இந்நூலில் உள்ள பல்வேறு ‘வக்கா’ மற்றும் ‘சுட்டா’ (அந்நூலின் உட்பிரிவுகள்) ஆகியவற்றை வைத்து புத்தரின் கருத்துகள் என்னவாக இருந்தன என்பது குறித்து நாம் அறியலாம். தவிரவும், பின்னாட்களில் வந்த மன்னர்களின் கல்வெட்டுகளில் சங்கம் குறித்த செய்திகளும் தரவுகளாய் அமைகின்றன.

அவரது காலத்தில் நடைமுறையில் இருந்த பெரும்பான்மை பிராமணிய அரசை விட, ஆங்காங்கே உயிர்ப்போடு இருந்த பழங்குடி ஜனநாயகங்கள் புத்தரின் சங்கம் உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன. வேதியியல் ஆய்வு நடத்தும்போது, சிறு மாதிரியை எடுத்து ஆய்வு செய்வோம் இல்லையா? அது போன்று புத்தரது நிலைப்பாடுகளை இந்நூல் பல்வேறு தரவுகள் கொண்டும், ஒப்பீடுகள் செய்து விவரித்தாலும், நூலில் உள்ள சங்கம் சார்ந்த செய்திகள் என்னும் மாதிரியை மட்டும் எடுத்துக்கொண்டு இந்நூல் அறிமுகம் செய்வது சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்!

  1. அக்காலத்தில் நடைமுறையில் இருந்த பிராமணிய கல்வி அமைப்பான குருகுலத்தில் இருந்து சங்கம் வெகுவாக மாறுபட்டது: குருகுலத்தில் குரு மட்டுமே ஒற்றை ஆளுமை, சீடர்கள் அடிமை போன்றோர் ஆவர்; புத்தரது சங்கம் ஜனநாயக அமைப்பு, உரையாடல்களின் வழியே தெளிவடையும் கல்வி முறையைக் கொண்டிருந்தனர். பிராமணர்களும், சத்திரியர்களும் மட்டுமேயான குருகுலங்களுக்கு மாற்றாக சாதி, பாலின பேதமற்று அனைவரையும் அரவணைத்து ஏற்றது பௌத்த சங்கம்!
  2. அடிமைகளையும் சங்கத்தில் சேர்த்துக்கொண்டபோது சங்கத்தின் புரவலராக இருந்த மன்னர் அஜாதசத்ரு இப்போக்கை விமர்சனம் செய்கிறார். அப்போது புத்தர், ‘உங்கள் அடிமை ஒருவன் அங்கிருந்து விலகி சங்கத்தில் இணைகிறார் என்று வைத்துக்கொள்வோம்; அவரை அவர் விருப்பத்துக்கு மாறாக மீண்டும் அடிமை முறைக்கு இழுத்துச் செல்வீர்களா?’ என்று கேட்டு, மன்னர் , ‘அந்த பிக்கு மரியாதைக்கு உரியவர் தான்’ என்று சொல்லும்வரை புத்தர் விளக்குகிறார். அடிமை என்பவனும் விழிப்புநிலை அடையவல்ல மனிதனே என்பது அவர் நிலைப்பாடு.
  3. அன்றைய சங்கத்தில் தற்போதைய நாடாளுமன்ற நடைமுறைகள் வழக்கத்தில் இருந்ததை அண்ணல் அம்பேத்கர் ஆச்சரியத்தோடு பதிவு செய்கிறார். சங்கத்தின் அவை தொடங்க குறைவெண் வரம்பு (quorum) எட்டியதா என்று கண்காணிக்க ஒரு பிக்கு; அன்றைய சங்க உரையாடல்களைக் கேட்டுப் பதிவு செய்ய ஒரு குழு. இவர்கள்கூட தம் விருப்பத்தைக் கேட்டு அந்தப்பணிகளை ஏற்றவர்களே! அதே போல ஒரு பணி பிடிக்கவில்லை என்றாலோ, வேறு வேலை செய்கிறேன் என்று எண்ணினாலோ, சங்கம் கூட்டி முடிவெடுக்கப்பட்டது! சங்கத்தில் இருந்தே வெளியேறுகிறேன் என்று கூறிய பிக்கு ஒருத்தருக்கு வெளியேற அனுமதி தருகிறார் புத்தர்!
  4. தனிநபர் சொத்துக்கு எதிராக இருந்த புத்தர், சங்கத்துக்கு என்று சொத்து நிர்வகிக்கும் நிலை வரும்போது, மிகத்தெளிவாக சில நியதிகளை வகுக்கிறார். பிச்சையில் எவை தவிர்க்கப்படவேண்டும், சங்கத்தின் நாற்காலிகள் தலையணைகள் போன்ற உடமைகளுக்கு பொறுப்பாளி யார், பிக்கு ஒருவர் இறந்தால் அவரது பொருள்கள் யாரிடம் செல்லவேண்டும், என்பது போன்ற நுட்பமான விவரங்களைக் கூட விநய பிடகாவில் இருந்து நாம் அறிய முடிகிறது.
  5. பிக்குகளுக்கு உள்ளே எந்த சாதியில் இருந்து வந்தவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிற சர்ச்சை எழுகிறது. அப்போது சாதி அடிப்படையில் எந்த சலுகையும் வழங்கவில்லை புத்தர். வயதில் மூத்த பிக்குவுக்கு மற்றவர்கள் மரியாதை செலுத்த வேண்டும் என்கிற விதி மட்டும் இருந்தது தெரிகிறது.
  6. பெண்களை சங்கத்தில் சேர்த்தது என்பது அதற்கு முன் யாரும் துணியாத ஒன்று. பிராமணியம் பெண்களை ஆண்களுக்கு அடிமைகள் என்று கருதிவந்த காலத்தில், சங்கத்தில் அவர்களைச் சேர்த்து அவர்களுக்கான வெளியை அமைத்துத் தந்தவர் புத்தர். அவ்வாறு சங்கத்தில் இணைந்த பிக்குணிகளின் விடுதலை உணர்வும், அகமகிழ்வும் அவர்கள் எழுதிய பாடல்களில் (தெரி கதா) இருந்து நமக்குத் தெரியவருகிறது.
  7. போதாமைகளே இல்லாதவராக புத்தர் இருந்ததில்லை. கடன்காரர்களை, படைவீரர்களை, தப்பித்து வந்த அடிமைகளை சங்கத்தில் சேர்க்கக் கூடாது என்ற விதி ஒரு காலகட்டத்தில் இருந்திருக்கிறது. சங்கத்துக்கு பொருளுதவி செய்த அரசர்களுக்காகவும் சில சமரசங்களை செய்திருக்கிறார் புத்தர். பெண்களை சங்கத்தில் சேர்ப்பதற்கு உடனே இசையவில்லை புத்தர்; ஆனந்தரின் நீண்ட வற்புறுத்தலுக்குப் பின்னரே புத்தர் பிக்குணிகளை அங்கீகரிக்கிறார்.

இவ்வாறாக, பௌத்த சங்கத்தை உருவாக்கிய ஒரு மனிதர் கண்டிப்பாக கடவுளோ, இறைத்தூதரோ இல்லை. இதுகாறும் அவர்மீது சொல்லப்பட்டு வந்த பல கட்டுக்கதைகளுக்கு தரவுகள் மூலம் பதில் சொல்கிறது இந்நூல். மெல்ல தன் ஒளிவட்டம் துறந்து, மண்ணில் இறங்கி சக மனிதனாக, அவலங்களில் சிக்கிய சமூகத்தை மேம்படுத்த வந்த சிந்தனையாளராக புத்தரைப் பார்க்கவைக்கும் இந்தப் புத்தகம்!

நூல்: அரசியல் சிந்தனையாளர் புத்தர்
ஆசிரியர்: காஞ்சா அய்லய்யா
தமிழில்: அக்களூர் இரவி
எதிர் வெளியீடு|336 பக்கங்கள்

Leave a comment